search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்கள ராணுவ வீரர்கள்"

    ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினரை அழைத்து வந்து புத்த கயா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்த மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவத்திற்கு, இந்தியா பாராட்டு பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது.

    இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய அரசு, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள ராணுவத்தினர் 80 பேர்களை அழைத்துக் கொண்டு வந்து, புத்த கயா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி, விபின் ராவத், நல்லெண்ணப் பயணம் என்று சொல்லிக் கொண்டு கொழும்புக்குச் சென்றபோது, சிங்கள ராணுவ தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக வேண்டுகோள் விடுத்தாராம். அதை இந்தியத் தளபதி ஏற்றுக் கொண்டாராம்.

    அதற்காகவே, சிறப்பு விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்துள்ளனர். அந்த ராணுவத்தினரும், அவர்கள் குடும்பத்தினரும், இந்திய விமானப் படையின் சி 17 குளோப் மாஸ்டர் என்ற விமானத்தில் இங்கே வந்துள்ளனர்.

    2005 முதல் 2009 வரையிலும், சிங்கள ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் அடிக்கடி கொழும்பில் சந்தித்துக் கொண்டாடிக் கும்மாளம் போட்டதுபோல், மோடி ஆட்சியில் இன்னும் வீரியமாகத் தொடர்கின்றது.

    இனப்படுகொலை செய்த சிங்களக் குற்றவாளிகளைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துப் பாராட்டும் இந்திய அரசை, மானத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு விதைக்கின்ற வினைகளுக்கெல்லாம், உரிய அறுவடையைக் காலம் தீர்மானிக்கும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    ×